கேட்கத் தயங்கும் கேள்விகளும், அதற்கான விடைகளும்

1. ஏன் 18 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இரத்தம் கொடையாகப் பெறுவதில்லை?

ஐயா, ஒருவர் இரத்தம் தானம் தருவதற்கு முன் அவர் தகுதி உள்ளவரா? என்று அறிந்து கொள்ள சில பரிசோதனைகளை செய்வோம். அந்த பரிசோதனைகளில் தகுதியான ஒருவர் 18 வயதிற்குக் குறைவாக இருந்தாலும், உடற்கூறு இயலின்படி இரத்ததானம் செய்ய தகுதியானவர்தான் எனினும், 18 வயது பூர்த்தி அடைந்த ஒருவரே சட்டப்படி ஒப்புதல் வழங்கும் தகுதி பெறுகிறார். எனவே, 18 வயது என்பது சட்டப் பார்வையில்தானே தவிர, அறிவியல் அடிப்படையில் அல்ல. அமெரிக்காவில் 16 வயது பூர்த்தி அடைந்த ஒருவர் கூட இரத்த தானம் செய்ய முடியும்.

2. ஒருவர் 65 வயதைக் கடந்திருந்தாலும், அவர் மருத்துவக் காரணங்களினால் இரத்ததானம் செய்யும் தகுதியை அடைந்திருந்தால், அவரிடமிருந்து இரத்தம் கொடையாகப் பெறலாமா?

ஐயா, மருத்துவத்தின் அடிப்படையில் கண்டிப்பாகத் தரலாம். அவருக்கு எந்தப் பிரச்சனையும் வருவதற்கு வாய்ப்பில்லை.

3. இந்தியாவில் ஏன் 65 வயதிற்கு மேற்பட்டவர்களிடமிருந்து இரத்தம் கொடையாகப் பெறுவதில்லை?

ஐயா, ஒருவருக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க, அவருடைய இரத்தக் குழாய்கள் சுருங்கத் தொடங்கும். சுருங்கிய இரத்தக் குழாய்களின் வழியே இரத்தத்தை தானம் செய்யும்போது, அவருடைய இரத்த அழுத்தம் மாறுபட்டு இருதயக் கோளாறுகள் ஏற்படலாம் என்று அறிவியல் கூறுகிறது. ஒருவருடைய இரத்தக் குழாய்கள் சுருங்கி உள்ளனவா? என்று கண்டுபிடிப்பது கடினம். இரத்தக் குழாய்கள் சுருங்குவது என்பது தனிப்பட்ட மனிதர்களைப் பொறுத்து அமையும். எனவே நமது நாட்டில் 65 வயதை இரத்த தானத்திற்கு ஓய்வு பெரும் வயதாக எடுத்துக்கொள்கிறோம்.

4. ஒருவர் 45 கிலோவிற்கும் குறைவான எடையைக் கொண்டியிருந்தால், அவரிடமிருந்து இரத்தத்தை தானமாக பெறலாமா?

ஐயா, பொதுவாக தவிர்க்க வேண்டும். மாருதில் கண்டிப்புடன் தவிர்க்கிறோம். அறிவியல்படி சில அவசரக் காலகட்டங்களில், சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சுமார் 2 அல்லது 3 கிலோ எடை குறைந்திருந்தாலும் இரத்ததானம் செய்யலாம். அவரது உடல் எடையை 8-ஆல் பெருக்கினாள் 350-க்கு மேல் அல்லது அதிகமாகவோ இருப்பின் அவரிடமிருந்து ஒப்புதல் பெற்று இரத்ததானம் செய்யலாம்.

5. ஏன் Hb அளவு 12.5 Gms % க்கும் கீழாக உள்ளவர்களிடமிருந்து இரத்தம் பெறுவதில்லை?

ஐயா, 12.5 % Hb என்பது நல்ல ஆரோக்கியத்தைக் குறிக்கும் அளவீடு. இதைவிடக் குறைந்த அளவில் உள்ளவர்கள் இரத்ததானம் செய்யும் அளவிற்கு ஆரோக்கியமானவர்கள் அல்ல. மேலும் 12.5 Gms % அளவிற்கு கீழ் உள்ளவர்களிடமிருந்து எடுக்கப்படும் இரத்தம், நோயாளிகளுக்கு செலுத்தும்போழுது, அது நோயாளிகளுக்கு பயனளிப்பது இல்லை. பிராணவாயுவை எடுத்துச் செல்லும் திறன் குறைவாக இருப்பதினால், இதுபோன்ற இரத்தம் நோயாளிகளுக்கு பயன் அளிப்பது இல்லை.

6. ஏன் இரண்டு இரத்தானத்திற்கு இடையில் குறைந்தபட்சம் 3 மாத இடைவெளி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது?

ஐயா, இரத்ததானிகளின் கூடுதல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுத்தான் 3 மாத இடைவெளி வலியுறுத்தப்படுகிறது. அமேரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் 2 மாத இடைவெளியே போதுமானதாக கருதப்படுகிறது. பொதுவாக இரத்தத்தை தானம் செய்த பிறகு 21 நாட்களுக்குள் நம் உடம்பில் ஊறி விடும்.

7. இரத்ததானம் செய்தால் மட்டும்தான் இரத்தத்தை கொடுப்பீர்களா?

ஐயா, அப்படி இல்லை. நாங்கள் உங்களை கட்டாயப்படுத்தவில்லை. இருப்பினும் இந்தியாவில் தேவைப்படும் அளவிற்கு இரத்ததானம் கிடைப்பது இல்லை.

இந்தியாவில் ஓர் ஆராய்ச்சியில் “ஏன் நிறைய பேர் இரத்ததானம் செய்யவில்லை?” என்பதைப் பற்றி ஆராயும்போது கிடைத்த விடை என்னவென்றால், “எங்களை யாரும் இரத்ததானம் செய்யும்படி கேட்கவில்லை” என்பதுதான். எனவேதான் இப்படி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் ஒரு நாள் நமது நாட்டில் தேவையான அளவிற்கு இரத்ததானம் இருக்கும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இரத்ததானம் செய்பவர் இரத்த கொடையாளர் ஆவார். உங்களை போன்று இரத்தத்தை தானம் செய்த ஒருவருடைய இரத்தத்தைத்தான் நாம் நம் உறவினரைக் காப்பாற்ற இன்று வாங்கிச் செல்கிறோம். எனவே, நீங்கள் தானமாகத் தரும் இரத்தம் வேறு ஒருவரை காப்பாற்றத் தேவைப்படும் என்பதால் மட்டுமே நாங்கள் உங்களை இரத்ததானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

8. என்ன சார், இரத்ததானம் இலவசமாகத்தான் செய்கிறார்கள். ஆனால் ஏன் அதைப் பெற நாங்கள் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது? இரத்ததானம் செய்து இரத்தம் பெறுகிறோம். உங்களுக்கு ஏன் பணம் கட்ட வேண்டும்?..

ஐயா, ஒரு சிறிய உதாரணம் மூலம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். நாம் தான் ஒரு தையல்காரிடம் புதுத் துணியை தருகிறோம், இருப்பினும் அந்த துணியை, அவர் சட்டையாக நம்மிடம் திருப்பித் தரும்போது அதற்குரிய கட்டணம் தருகிறோம். அதேபோலதான் இங்கும். அரசாங்கம் நிர்ணயம் செய்த கட்டணம் தான் செலுத்த வேண்டியுள்ளது.

டோனார் தரும் இரத்தத்தை அப்படியே நோயாளிக்கு ஏற்றினால் அவருக்கு எச்.ஐ.வி, மஞ்சள் காமாலை போன்ற பல நோய்கள் வர வாய்ப்யுள்ளது. சில சமயம் அது அவரது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். அதனால் தான் நமது அரசாங்கம் ஒரு பிளட் பேங்கிற்கு லைசென்ஸ் வழங்கி, அவர்கள் தானமாக பெறப்படும் இரத்தத்தில் சில பரிசோதனைகளை செய்வதைக் கட்டாயமாக்கி, அதற்கான கட்டணங்களையும் செய்துள்ளது.

9. தானமாக தந்த இரத்தத்தில் என்னென்ன பரிசோதனைகளை செய்வீர்கள்? அதற்கான செலவுகள் பற்றிக் கூற முடியுமா?

ஐயா, ஒவ்வொரு முறையும் ஒரு பேஷண்ட் பிளட் குருப், ஆண்டிபாடி ஸ்கிரீனிங் (ஏதேனும் ஆண்டிபாடிஸ் உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள்) மற்றும் க்ராஸ் மேட்ச் (நோயாளிகளின் இரத்தமும், தானமாக தரப்பட்ட இரத்தமும் ஒத்துப் போகின்றதா? என்பதை உறுதி செய்யும் டெஸ்ட்). இதற்கு சுமார் 400 ரூபாய் ஆகிறது. மேற்கூரிய அனைத்துப் பரிசோதனைகளையும் ஒருவர் இரத்ததானம் செய்யும் ஒவ்வொரு முறையும் பரிசோதனை செய்யப்படும்.

மேலும், நீங்கள் பெறும் ஒவ்வொரு பிளட் யூனிட்டும் இரத்தத்தின் மூலம் பரவ வாய்ப்புள்ள நோய்களான

1. எச்.ஐ.வி (HIV Ⅰ & Ⅱ)
2. மஞ்சள் காமாலை (Hepatitis B Virus)
3. மஞ்சள் காமாலை (Hepatitis C Virus)
4. பிறப்பு உறுப்பு நோய்கள் மற்றும்
5. மலேரியா

ஆகிய டெஸ்ட்கள் செய்யப்படும். இந்த டெஸ்ட்கள் ஒரு இரத்தப் பரிசோதனை நிலையத்தில் டெஸ்ட் செய்தால் ஆகும் செலவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் கீழே தரப்பட்டுள்ளது.

நீங்கள் ரூ.1550 (ரூ 400 + ரூ 1150) மட்டும்தான் செலுத்த வேண்டும். இது இரத்தம் பெறுபவரின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆகும் செலவு மட்டுமே. அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ள கட்டண விவரங்களுடன் ஒப்பிட்டால் இங்கு அதை விட குறைவாகத்தான் செலுத்துகிறீர்கள் என்பதையும் அறியலாம்.

வ.எண். டெஸ்ட் விவரம் (ECLIA முறையில்) நமது மாருதி கட்டணம் ரூ ஒரு லேப்பில் ஆகும் செலவு ரூ மாருதியை விட எவ்வளவு மடங்கு அதிகம்
#1 எச்.ஐ.வி (HIV Ⅰ & Ⅱ) ரூ.200 ரூ.650 3.25 மடங்கு
#2 மஞ்சள் காமாலை (Hepatitis B Virus) ரூ.200 ரூ.400 2.00 மடங்கு
#3 மஞ்சள் காமாலை (Hepatitis C Virus) ரூ.320 ரூ.900 2.81 மடங்கு
#4 பிறப்பு உறுப்பு நோய்கள் VDRL ரூ.100 ரூ.270 2.7 மடங்கு
#5 மலேரியா ரூ.80 ரூ.240 3.0 மடங்கு
#6 புரத மதிப்பீடு (Antibody screening) ரூ.250 ரூ.550 2.2 மடங்கு
#7 இரத்த வகை, குறுக்கு பொருத்தம் (Blood grouping & cross matching) ரூ.400
மொத்தம் ரூ.1550 ரூ.3010 1.94 மடங்கு

10. நீங்கள் லாப நோக்கில்லாத ஒரு டிரஸ்ட், அப்படியிருந்தும் ஏன் கட்டணம் வாங்குகிறீர்கள்?

ஐயா, உங்கள் நண்பரோ அல்லது உறவுகளோ பெறப் போகும் இரத்தம் அவருக்கு எந்தவித பிரச்சனைகளையும் உண்டு பண்ணி விடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக செய்யப்படும் டெஸ்ட்களுக்கும், இரத்தத்தை மிகப் பாதுகாப்பாக சேமித்து வைக்கவும் ஆகும் செலவையே நோயாளிகள் தருகிறார்கள்.

இதற்கு மேல் ஆகும் செலவுகளான, அதாவது இந்த பிளட் பேங்கிற்குத் தேவையான அடிப்படை கட்டுமான செலவு, வாடகை, மின்சாரக் கட்டணம், ஊழியர்களின் சம்பளம் போன்றவைகள் மாருதி டிரஸ்ட் மூலம் செலவு செய்யப்படுகிறது. இது பெரும் தனவந்தர்கள் தரும் நன்கொடைகள் மூலம் சமாளிக்கப்படுகிறது. நீங்களும் நன்கொடைகள் தரலாம். உங்களுடைய நன்கொடைகளுக்கும் வருமான வரி விலக்கும் (U/s 80-G of IT Act) ன் கீழ் உண்டு.

11. இந்தியாவில் இரத்தம் ஏற்றிக் கொள்வது எவ்வளவு பாதுகாப்பானது?

ஐயா, மும்பையைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளரான திரு.சேத்தன் கோத்தாரி அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்தியாவில், அக்டோபர் 2014 யில் இருந்து, மார்ச் 2016 வரைக்குமான இடைப்பட்ட காலதத்தில் குழந்தைகள் உட்பட மொத்தம் 2234 பேர் பாதுகாப்பற்ற இரத்தம் ஏற்றபட்டதன் மூலம் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் திரு.சேத்தன் கோத்தாரிக்குத் தெரிவித்துள்ளது. இதைப்பற்றி மனித உரிமை ஆணையமும் விசாரணை செய்து வருகிறது. ஆனால் இந்த நிகழ்வுகள் பெருமளவில் அரசாங்கம் இரத்த வங்கிகள் மூலமாகத்தான் நடந்துள்ளது. இதற்கு அடைபடைக் காரணம் பரிசோதனைகள் செய்ய முறையாக பயிற்சி பெற்றவர்கள் இல்லாததே. நமது மாருதியில் பணி புரியும் அனைவருக்கும் நாங்களே தகுதியான நபர்களைக் கொண்டு முறையான பயிற்சி அளிக்கிறோம். அதன் பிறகே அவர்கள் பணியில் அமத்தப்படுகிறார்கள்.

12. நோயாளிக்கு பிளட் தருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்று சொல்றீங்க.. ஆனால் மற்ற பிளட் பேங்க் யில் 20 நிமிடங்களில் தருகிறார்களே.. அது எப்படி?

ஐயா, நீங்கள் கொண்டு வரும் நோயாளிகளின் இரத்த மாதிரி (Blood Sample) எங்களுக்கு கிடைத்ததிலிருந்து உங்களுக்குத் தேவைப்படும் இரத்தம் தர சுமார் 60 முதல் 90 நிமிடங்கள் ஆகும். ஏனெனில் நோயாளியின் இரத்தமும், நாங்கள் தரும் இரத்தமும் ஒத்துப் போகிறதா? என்பதை மிக நுணுக்கமாகப் பார்ப்பதற்கு உலகம் முழுவதும் இந்தளவு நேரம்தான் ஆகும். இந்த நேரத்தை விட சீக்கிரம் தந்தால் அந்த இரத்த வங்கி வெறுமனே மேலோட்டமாகத்தான் டெஸ்ட் செய்கிறார்கள் என்பதே உண்மை.

இந்த பரிசோதனைகள் மிகவும் முக்கியம் ஏனென்றால் ஒத்துப் போகாத இரத்தத்தை நோயாளிகளுக்கு செலுத்தினால் அவருக்கு எதாவது ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சில சமயங்களில் நோயாளிகளின் நலம் கருதி மேலும் கூடுதலாக சில பரிசோதனைகளையும் செய்ய நேரிடலாம். அப்போதெல்லாம் கூடுதல் நேரம் தேவைப்படும்.

13. இரத்ததானம் செய்வதற்கு முன்னால் என்னென்ன விஷயங்கள் மருத்துவ ரீதியாக பரிசீலிக்கப்படும்?

ஐயா, தானம் செய்பவரின் Hb (ஹீமோகுளோபின்) அளவு, உடல் எடை, தற்போதைய உடல் நிலை, இரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், ஆகியவற்றின் இன்றைய நிலைமை பரிசோதிக்கப்படும்.

14. ஏன் மேற்குறிப்பிட்ட பரிசோதனைகள் தானம் பெறுவதற்கு முன்னதாகவே செய்வதில்லை?

ஐயா, தானமாக பெறப்பட்ட இரத்தத்தில் மேற்குறிப்பிட்டுள்ள பரிசோதனைகளை சரியாகவும், மிகத் துல்லியமாகவும் செய்வதால் மட்டும்தான் நோயாளிகளிக்குப் பாதுகாப்பான இரத்தத்தை வழங்கிட முடியும். அனைத்துப் பரிசோதனைகளையும் செய்ய அதிக நேரம் நீடிக்கும் என்பதால் ஒரு டோனோர் நீண்ட மணி நேரம் காத்திருக்க வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தானமாக பெறப்பட்ட இரத்தத்தை பரிசோதனை செய்யும் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.