இரத்ததானம் செய்வோரின் பொறுப்புகள் மற்றும் உங்களுக்கான முக்கிய தகவல்கள்
இரத்ததானம் செய்யமுடிவு எடுக்கும் முன் கீழ்க்கண்ட தகவல்களை கவனமாக படிக்கும்படி வேண்டுகிறோம்.
இரத்ததானம் செய்வது மிக இனிமையான அனுபவமே, மேலும் உங்களின் இந்த செயல் நோயாளிக்கு மிகமிக உதவியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
உங்களின் பாதுகாப்பும் மற்றும் உங்களால் இரத்தம் பெறும் நோயாளிகளின் பாதுகாப்பையும் உறுதிபடுத்த மாருதி இரத்த வங்கியில் இரத்ததானம் செய்யும்முன் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதை நாங்கள் வழக்கமாக கொண்டிருக்கிறோம். அதில் ஒரு பகுதியாக உங்களைப் பற்றிய விவரங்கள் தேவைப்படுகிறது.
தனித்த நேர்காணலின்போது எங்கள் இரத்தவங்கி ஊழியர் உங்களது ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைமுறை சம்பந்தமான கேள்விகளை கேட்பார். அவற்றில்,
- சில கேள்விகள் உங்கள் பாலியல் செய்கைகள் சம்மந்தப்பட்டதாகவோ, சட்டவிரோத (தடை செய்யப்பட்ட) மருந்துகள் உபயோகித்தல் தொடர்பாகவோ, உங்களது பயண விவரங்கள், மற்றும் சில தொற்றுநோய் பற்றியதாகவோ இருக்கும்.
கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில் அளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
நீங்கள் தரும் விவரங்கள் முற்றிலும் அந்தரங்கமானவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நாங்கள் கண்டிப்பாக யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டோம்.
ஒருவேளை விவரங்களைத் தர தயக்கம் இருந்தாலோ அல்லது விருப்பம் இல்லையென்றாலோ, நீங்கள் இரத்ததானம் செய்வதை தவிர்க்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.
நேர்காணலின் போது நீங்கள் ஏதேனும் கேள்விகளுக்கு விடையளிக்க விரும்பாவிட்டால், “எனக்கு விடையளிக்க விருப்பம் இல்லை” என்று தாராளமாக சொல்லுங்கள். நாங்கள் தவறாக எடுத்துகொள்ள மாட்டோம். இப்படி சொல்வது உங்களின் உரிமையும் கூட.
எல்லா நோயாளிகளுக்கும் பாதுகாப்பான இரத்தத்தை தரவேண்டியது எங்கள் கடமை. அதை தொய்வில்லாமல் செய்யவே, இந்த மாதிரி சங்கடமான / இக்கட்டான கேள்விகள் கேட்கப்படுகிறது. எங்களின் நோக்கம் உங்களின் பாதுகாப்பு மற்றும் இரத்தம் பெறுபவரின் பாதுகாப்பை உறுதி செய்வதுதானே தவிர, மற்றபடி உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் துளியும் கிடையாது. இருப்பினும், இந்த விவரங்களை நாங்கள் ஏன் கேட்கிறோம் என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளதா? வாருங்கள் சில முக்கிய விசயங்களை உங்களுக்கும் எளிமையாக புரிய வைக்க முயல்கிறோம்.
Window period (இடைப்பட்ட காலம்)
தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஒருவருக்கு ஒரு நோய்த்தொற்று (உ.ம் –எச்.ஐ.வி) ஏற்பட்டதிலிருந்து. சில நாட்களுக்கு பிறகுதான் அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை இரத்த பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும். இந்த இடைபட்டகாலமே விண்டோ பீரியட் எனப்படும். இந்த இடைபட்ட காலத்தில் உள்ள ஒரு நபரை எந்த ஓர் உயர்தர பரிசோதனைகள் மூலமாகவும் கண்டறிய முடியாது. எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதிலிருந்து குறைந்தது ஏழு நாட்களுக்கு பிறகுதான் இரத்த பரிசோதனையில் கண்டறியமுடியும். இதனால் தானமாக தரும் இரத்தம் மூலம் எச்.ஐ.வி போன்ற நோய்கள், இரத்தம் பெறுபவர்களுக்கும் பரவி விடும்.
இந்த விண்டோ பீரியட் எத்தனை நாள் என்பது டெஸ்ட் செய்யப்படும் டெக்னாலஜியின் அடிப்படையில் அமையும். இன்னும் எளிதாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், விண்டோ பீரியட் எந்த டெக்னாலஜியில் மிகவும் குறைவான நாட்களாக உள்ளதோ, அந்த டெக்னாலஜி மிகவும் நுணுக்கமானது மற்றும் துல்லியமானது. விண்டோ பீரியட் எந்த டெக்னாலஜியில் அதிகமான நாட்களாக உள்ளதோ, அந்த டெக்னாலஜியின் நுணுக்கமும் துல்லியமும் குறைவு என்று அர்த்தம்.
ஓர் இரத்தம் வங்கியில் தானம் பெறப்பட்ட இரத்தத்தை விண்டோ பீரியட் குறைந்த நாட்கள் உள்ள ஒரு டெக்னாலஜியில் பரிசோதிப்பது மிகவும் அவசியம்.

